உளப்பகுப்பாய்வு

நவீன அறிவியல் தூண்களில் ஒன்றான உளப்பகுப்பாய்வு அகப் போராட்டங்களைத் தணிக்கிறது. இதன் வழியாகப் புறப் போராட்டங்கள் சமாதானமாகின்றன . ஃப்ராய்ட் உருவாகிய உளப்பகுப்பாய்வு மனித நேயத்தை வளர்க்கிறது. வாருங்கள் மனித நேயம் வளர்ப்போம்...

Thursday, June 14, 2012

. . . நான் ஆகிய இரவிச்சந்திரன் ஆகிய அவன் பற்றி நீ . . .

நான் பற்றிச் சொல்ல வருகிறான் இரவிச்சந்திரன். உழைத்து உழைத்துக் கருத்துப் போன நிறத்தை வம்சாவளியில் கொண்டு வந்தான் நான். சொல்லிக்கொள்ளும் வண்ணம் சாதியுமல்ல. பெருமைப்படும் அளவுக்குச் சமூக  அந்தஸ்துமல்ல. அப்படிப்பட்ட  கால,இடச் சூழலில் பிறந்தான் இரவிச்சந்திரன். ஏலகிரி தொடங்கி சவ்வாது வரை  சூழ்ந்த மலைத் தொடர் வளைய  மையத்தில் திருப்பத்தூர் . நானின் ஊர். பெயர் சொன்னவுடன் அடையாளப் படுத்திக்கொள்ளும் அளவுக்குப் பெரிய ஊர் அல்ல. என் வம்சம் திருப்பத்தூர் என்றாலும் அவன் பிறந்தது மலைக்கோட்டை மாநகர்  திருச்சி. 10. 03. 1966 நாளன்று காலை  6.32 என்னை வரவேற்கவே  உதித்திருக்கக் கூடும் சூரியன். நானின் முதல் சுவாசம் திருச்சி காற்று . எனது முதல் சுவடு அந்த மண் மீதே.இருப்பினும் இரவிச்சந்திரன் திசுக்களில் உள்ள உயிரணுக்கள் திருப்பத்தூர் மண் துகள்களே. நான் பெரிய படிப்பாளி அல்ல. படிப்பு வராவிட்டால் அவமானப் படவும் நன்கு படித்தால் பெருமைப் படவும் செய்யாத எழுபதுகளில் அவன் பள்ளிப் பருவம். மோசத்துக்கும் மேலே சுமாருக்கும் கீழே என் படிப்பு. கல்லூரி படிப்பு சுமார்தான். ஆய்வுப் படிப்பு இரவிச்சந்திரன் நிலை தலைகீழ் ஆனது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது; நானுக்கு இருப்பது ஆய்வு மனம். மனன மனம் அல்ல. செவ்வியல் வழி பிறந்து நவீனத்துவத்தில் வளர்ந்து பின் நவீனத்துவத்தில் நின்று கொண்டிருக்கிறேன் அவன் என்கிறாய் நீ.
 படித்தவை  :           பி .எஸ் ஸி (இயற்பியல் )
                                   பிஜிடிசிஏ
                                   எம்.ஏ (தமிழ்)
                                   எம். ஃபில்
                                   பிஎச். டி

புறத் தாக்கங்கள் அன்றி ஒரு விதை கூட முளைக்காது. அணுக்களின் தாக்கத்தில் தான் உயிர்களே தோன்றுகின்றன. சுற்றுச்சூழல் தாக்கங்களைச் சரிவரப் பெற்ற உயிர் நன்கு வளரும். அதே சமயம் மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்ற மனத்தின் வெளி, பறந்து விரியும். மாறா உள்ளம் முதிராது. விதைக்குப் நீர் போல் உள வளர்ச்சிக்குப்  புறத்தாக்கம் . நீரின் தன்மை பொருத்து விதை நலம் பெரும். இயல்பில் நம்முள் பல பண்புகள், திறன்கள் இருப்பினும் அவை வளர, வலிமை பெறப்  புறத்தாக்கங்கள் தேவை. மனித உள்ளம் சுயம்பு கிடையாது. என் உள வாழ்வில் சிலரின் தாக்கங்கள் உண்டு. குறிப்பிடும்படியாக இருப்போர் நால்வர்:  எம்.ஜி.ஆர்., பெரியார், சிக்மண்ட்  ஃப்ராய்ட், புத்தர் .


பள்ளிப் பருவத்தில் ...  எம்.ஜி.ஆர் 



முதல் தாக்கம்


எம்.ஜி.ஆர் - தமிழகத்தில் இந்தப் பெயர் ஆளைக் குறிப்பதல்ல; ஆளுமை பிம்பம். எழுபதுகளில் நான் சமுகத்தில் நுழைந்த போது   கண்ட முதல் விஸ்வரூபம். இந்தப் பெயர் வெறும் ஒலி அல்ல; மிகப் பெரிய காந்தம். திரை வழித்  தன்னம்பிக்கை டானிக். எம்.ஜி.ஆர் படங்களின் மையம் ஒன்றுதான்: எதையும் சாதிக்கலாம். சிங்கத்துடன் அவர் போடும் சண்டைக் காட்சிகளில்  ட்ரிக்ஸ், டூப் கூட இருக்கலாம். அதைப் பார்த்த என்னுள் தன்னம்பிக்கை வலுப்பெறும். உண்மையில் சிங்கம் வந்தால் கூட அதை எதிர்கொள்ள முடியும் என்கிற துணிவை அக்காட்சி தந்தது. பின்னாளில் சிக்மண்ட்  ஃப்ராய்ட் எனும் நார்னியா சிங்கத்தை எதிர்க்கொள்ள இத்துணிவே காரணம். துப்பாக்கிக்  குண்டு துளைத்தும் சாகாதவர் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் அவரின் மனோசக்தி தெரியும். அவர் காலத்தில்  பலரின் பிள்ளைப் பருவத்தைக்  குதூகலப் படுத்தியவர்.. வாழ்நாள் முழுவதும் குதுகலமாக இருக்கச் செய்பவர்..எம்.ஜி.ஆர். என்னைக் கெட்டப் பழக்கம் அண்டாததற்கு எம்.ஜி.ஆர்  ஒரு காரணம். இயல்பில் என்னுள்  இருக்கும்  தன்னம்பிக்கைக்கு உரம் எம்.ஜி.ஆர் . இந்நாள் அளவில் எனக்கு மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தது எம்.ஜி.ஆர் மரணம். அவரின் பூத உடலை எங்கள் ஊர் சந்தன மரப் பேழையில் வைத்துதான்  மெரினாவில்  விதைத்துள்ளனர் என்பதில் என்னுள் ஓர் ஆறுதல்.. இன்னமும்..


கல்லூரிப் பருவத்தில்...பெரியார்





முதல் தூண்டல்



பெரியார் - சிலருக்கு மட்டும் பட்டப் பெயர் பொருந்தும். அவர்களுள் ஒருவர் பெரியார். அறிவுலகில் முழுமையாக நான் நுழைந்த கல்லூரிப் பருவத்தில் கண்ட முதல் சூரியன். யார் எனும் வினாச் சொல்லைப் பெயரில் கொண்டதாலோ என்னவோ கேள்விகளையே அதிகம் எழுப்பினார் பெரியார். ஒவ்வொன்றும் சிந்திக்கத் தூண்டுபவை. அவரால் நானும் தூண்டப்பட்டேன் . குறிப்பாகக்  கடவுள் பற்றிய ஆச்சரியப் (!) புனைவுகளைக் கேள்விக்குறியாக(?) வளைத்தவர் பெரியார். அன்பிலே உருவான கடவுள்  கையில் ஆயுதம் எதற்கு என்று கேட்டபோது அதிர்ந்தேன். பக்திமான் ஆகிய நான் புத்திமான் ஆக ஊக்கம் பெற்றேன். என்னுள் பல மாய முடிச்சுகள் அவிழ்ந்தன . சிக்கல்களில் இருந்துக் கொஞ்சம் கொஞ்சமாக மனம் விடுபடுவதை உணர்ந்தேன். என் உலகம் கொஞ்சம் விரிவடைந்தது. மனத்தை அறிவு முந்தியது. கேள்விகள் என்னுள் எழத் தொடங்கின. விடைக்கான நூல்களைத் தேடினேன். 'அறிவுத் தேடல்  என் தொழில்' என்று ஆக்கியவர் பெரியார்.


பல்கலைக்கழகப் பருவத்தில்....சிக்மண்ட்  ஃப்ராய்ட்




 மானசீக குரு 



சிக்மண்ட்  ஃப்ராய்ட் - இந்தியாவில் பிரபலம் அடையாத பெயர். ஆய்வுலகில் ஒரு நூற்றாண்டாய்  ஆதிக்கம் செலுத்திவரும் குறிப்பான். 1900 ஆம் ஆண்டில்  Interpretation of Dreams மூலம்  நவீனத்துவத்தில் ஃப்ராய்ட் ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னமும் அடங்கவில்லை. உண்மை என்றும் அடங்காது. இது உண்மை. மனித இரகசியங்களை அம்பலப்படுத்தியதால் சம அளவு போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். பல்கலைக்கழகங்களில்  என் ஆய்வுப் பட்டங்களுக்காக  ஃப்ராய்டைப் படித்தேன். அவர் வழியில் என்னையும் படித்தேன். உள்ளத்தின் இயல்புகளையும் பிறழ்வுகளையும் வகைப்படுத்திச்  சுய ஆய்வுக்கு வித்திட்டவர் ஃப்ராய்ட். பொதுவில் நாம் ஒற்றை அல்ல. இரண்டாகவும் முன்றாகவும் இருக்கிறோம் என்பார். புரியாத புதிர்கள் நாம். இதை உணர்த்தவே முதல் பத்தியை அப்படி எழுதினேன்.  தன்னைப் புரிந்துக் கொள்ளாமல் பிறரைப் புரிந்துக்கொள்ள முனைந்தால் குழப்பமே மிகும். நவீன உலகில் தன்னைப் புரிந்துக்கொள்ள ஃப்ராய்ட் தேவை. இரண்டு எண்ணங்களுக்கு இடையிலான நுணுக்கமான ஊடாடல்களைப்  புரிந்துக் கொள்ள வழி காட்டுபவர் ஃப்ராய்ட். உள்ளம் ஓர்  இயந்திரம். வாழ்வை இட்டுச் செல்லும் என்ஜின். அது பழுது அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு. உளப்பகுப்பாய்வு எனக்குப் போதித்த பாடம் இது.  ஃப்ராய்ட் நூல்களைப் படிக்கும்போது இப்படிக் கூட மனிதன் சிந்திக்க முடியுமா என்று வியக்க வைத்தார். என் ஆய்வுக் கண் புரையைப் போக்கியவர் அவர். ஃப்ராய்ட் சொல்லிக் கொடுத்தபடி உளப்பகுப்பாய்வு செய்து வருகிறேன். இன்னமும் ஃப்ராய்டின் கடைக்கோடி  மாணவன் நான் என்பதில் பெருமை கலந்த கர்வம் எனக்கு உண்டு.


இன்று ...புத்தர்




 ஆத்மார்த்த ஆசான்


புத்தர் - இந்தக் குறிப்பான்  இந்தியத் தத்துவத்தின் ஒரு சொல் முகவரி. ஐரோப்பிய சிந்தனையாளர்களையே ஈர்த்தவர் எனும் போது அருகில் இருக்கும் நமக்கு பௌத்தம் மணக்காதா என்ன ?. பேரறிவு படைத்தவர் புத்தர். எனவே  அறிவு சொல்வதைக் கேட்கச்சொன்னார். அறிவுக்குப் படாததை அவர்  நம்பவில்லை; நம்பச் சொல்லவுமில்லை. அதனால்தான் கடவுள் பற்றி மௌனித்தார். பின்னால் அவர் கடவுளாக்கப் பட்டது காலத்தின் கொடுமை மட்டுமல்ல அவருக்குச் செய்த துரோகம் என்றும் கூறுவேன். கடவுளை மறுத்த அவர் கர்மத்தை ஏற்றார். இது தவத்தின் வழி கண்ட உண்மை. ஆழ்ந்து சிந்தித்தால் யாரும் எதை அறிந்தேற்க முடியும். அவர் கூறும் 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்கிற வாசகம் கேட்பதற்கு எளிதாகத் தெரியலாம். மனித வாழ்வின் ஆழத்து உண்மை இது. எனவே ஆசைகளைத் துறக்கச் சொன்னார். அதற்கான வழி கண்டு,  நிர்வாணக் கொள்கையைப்  படைத்தார். இதை ஃப்ராய்டும் யூங்கும்  தமது உளக் கோட்பாடாக  தகவமைத்துக் கொண்டனர்  என்பது கூடுதல் சிறப்பு .இதனால்  புத்தர் மீது எனக்கிருந்த விழுமம் கூடியது. உளப்பகுப்பாய்வுக்கும்  பௌத்தத்திற்கும் தத்துவார்த்த நெருக்கம் உள்ளது என்பதை அறிந்து, புத்தர் தாக்கம் கொண்டேன். கர்மா உண்மையெனில் ஆன்மா, மறுபிறவி, விதி எல்லாம் உண்மை. மேலைத் தத்துவங்களில் ஆன்மா இல்லை. எனவே அவற்றில் மெய்ம்மை கொஞ்சம் குறையே.  மேலைத் தத்துவங்களை விட இந்தியத் தத்துவங்களில் உண்மை மிகுதி என்பது என் கருத்து. காரணம் பல கேள்விகளுக்கு அங்கே விடை இல்லை. இந்தியத் தத்துவங்களில், குறிப்பாக, புத்தரிடம் உள்ளன. அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவை. ஆன்மாவும் அப்படியே. இதுதான் புத்தர் கண்ட அனாத்மா வாதம்.  மனத்தைக் கடந்து ஆன்மாவைச் சிந்திக்க என்னைத் தூண்டியவர் புத்தர்.